நீங்கள் ஒரு கர்ப்பிணித் தாயாக இருந்தால், பூனைகளை வளர்ப்பது உங்கள் கருவிலுள்ள குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை அறிவீர்களா?
பூனைகளின் செரிமான மண்டலத்தில் வாழும் Toxoplasmosis எனப்படும் ஒரு ஒட்டுண்ணி உள்ளது. பூனைகள் மலம் கழிக்கும் போது, அதனுடன் இந்த ஒட்டுண்ணியின் ஆயிரக்கணக்கான வித்திகள் (Sporulated oocysts) வெளியேறுகின்றன.
இந்த வித்திகள் உங்கள் கைகளில் ஒட்டி, நீங்கள் உணவு உண்ணும் போதோ அல்லது சுவாசம் மூலமாகவோ உடலுக்குள் சென்றால், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
அதேபோல், நீங்கள் உண்ணும் ஆட்டு இறைச்சி அல்லது பன்றி இறைச்சியிலும் இந்த ஒட்டுண்ணியின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு வடிவம் (Cyst) இருக்கலாம். நன்றாக சமைக்கப்படாத இறைச்சியை உண்பதும் இந்த நோய் ஏற்படுவதற்கான ஒரு காரணமாகும்.
கர்ப்ப காலத்தில் toxoplasmosis நோய் ஏற்பட்டால் உண்டாகும் பாதிப்புகள் என்ன?
கர்ப்ப காலத்தில் toxoplasmosis தொற்றிக் கொண்டால் பல சிக்கல்கள் ஏற்படலாம். குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு போன்றவை கூட நடக்க வாய்ப்புள்ளது.
மேலும், இந்த ஒட்டுண்ணியின் Trophozoite எனப்படும் வாழ்க்கைச் சக்கர வடிவம், நஞ்சுக்கொடி வழியாகப் பயணித்து உங்கள் குழந்தையின் உடலுக்குள் நுழையக்கூடும்.
அப்படி நடந்தால், குழந்தை பிறந்த பிறகு பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு ஆளாகும் ஆபத்துள்ளது. மஞ்சள் காமாலை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், கண் குறைபாடுகள், மனநலக் குறைபாடுகள் மற்றும் நிமோனியா போன்ற நோய்களால் குழந்தை பாதிக்கப்படலாம்.
இந்த நோயில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
• கர்ப்ப காலத்தில் பூனைகளின் மலத்தை அகற்றும் வேலைகளைச் செய்ய வேண்டாம். உங்கள் பூனை மீது உங்களுக்கு எவ்வளவு பிரியம் இருந்தாலும், கர்ப்ப காலத்தில் பூனைகளுக்கு அருகில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
• வீட்டுத் தோட்டம் போன்ற மண் சார்ந்த வேலைகளைச் செய்யும்போது கையுறைகளை (Gloves) அணியுங்கள்.
• வீட்டில் பூனை இருந்தால், சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சவர்க்காரம் போட்டு நன்றாகக் கழுவுங்கள். கொதித்தாறிய நீரைக் குடியுங்கள்.
• இறைச்சி சாப்பிடுவதாக இருந்தால், நன்றாகச் சமைத்த இறைச்சியை மட்டுமே சாப்பிடுங்கள். இறைச்சி வெட்டும் போது, காய்கறிகள் போன்ற மற்ற உணவுகளுடன் கலக்காதவாறு தனியான வெட்டும் பலகையைப் (Cutting board) பயன்படுத்துங்கள்.

